நாவி சந்திப்பிழை திருத்தி:
இது மாதிரியோ, இதைவிடச் சிறந்த மாதிரியோ பல தமிழ் மென்பொருட்கள் உருவாக வேண்டும் என்ற நோக்கில் இச்சந்திப் பிழை திருத்தி செயல்படும் விதமும், இதில் கையாளப்பட்டுள்ள நுணுக்கங்களும் இங்குப் பகிரப்பட்டுள்ளது. நாவியைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள் இந்த
வலைப்பதிவில் உள்ளன.
அடிப்படையில், உள்ளிடப்படும் சொற்களைச் சில மாதிரி பாவனைகள் மூலம் முடிந்தளவிற்கு அடையாளம் கண்டு அதன் பிறகு அதற்கு ஏற்ற இலக்கண விதிப்படி சந்தியைப் பரிந்துரைக்கும். இதன் முதன்மை நோக்கம் யாதெனில் பிழையைத் திருத்துவதை விட என்ன இலக்கண விதி என்று கண்டுபிடித்துத் தருவதே ஆகும். அதன் மூலம் எதிர்காலத்திலும் அப்பயனர் அடிப்படைக் காரணத்தை அறிந்து பிழையின்றி எழுத உதவும். அதனால்
இலக்கண விதிகள் தான் முதன்மையான ஆய்வுக் காரணி. அதற்குத் துணையாக மாதிரிச் சொற்கள், மாதிரி விகுதிகள், மாதிரி வியூகங்கள், மாதிரிக் குறியீடுகள் எனச் சில மாதிரித் தொகுதிகள் கொண்டே ஒரு சொல் இன்ன வகை என வகைப்படுத்தப்பட்டுப் பின்னர் அதற்கு ஏற்ற இலக்கண விதி கொண்டு பிழை திருத்தமும், காரணமும் தருகிறது.
மாதிரிச் சொற்கள்:
என்பது அதிகம் பயன்படுத்தப்படும், பிழை அதிகம் நிகழும் சொற்களின் தொகுதி. இங்கு எந்தத் தரவுத் தளமும் பயன்படுத்தப்படாததால் சுமார் 40~50 சொற்கள் இவ்வகையில் வருகிறது. உதாரணம்:- அந்த, இந்த, எப்படி...
மாதிரி விகுதிகள்:
என்பது விகுதிகள் மூலம் இனத்தைக் காட்டும் தொகுதிகள். உதாரணம்:- 'கள்' விகுதி என்றால் பெயர்ச் சொல், 'ஐ' விகுதி என்றால் பெயர்ச் சொல், 'கின்றன' என்றால் வினைச்சொல். இவ்வகை மாதிரிகளில் துல்லியம் குன்றும் மாதிரிகளை இரண்டாம் நிலை பரிந்துரையாகக் கொள்கிறது. உதாரணம்:- 'ஐ' விகுதி என்றால் இரண்டாம் வேற்றுமையாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.
மாதிரி வியூகங்கள்:
என்பது பிற மாதிரிகளின் மூலம் அடையாளம் காணப்பட்ட சொல் கொண்டு அதன் அருகில் உள்ள சொல்லைத் தீர்மானிக்கும் யுக்தி. உதாரணம்:- இரண்டு வினைச்சொல் அடுத்து வரும் போது வினையெச்சம் என்று கொள்கிறது. வினைச் சொல்லுக்குப் பிறகு பெயர்ச்சொல் வந்தால் அது பெயரெச்சம் என்று கொள்கிறது.
நேரடி விதிகள்:
நேரடியாகவே தெரியும் விதிகளின் படி சில சொற்கள் வலிமிகாது என உறுதி படுத்தப்படுகிறது. உதாரணம், ஏகாரத்தில் முடியும் சொற்கள், உயிர்த்தொடர்க் குற்றியலுகரத்தில் முடியும் சொல்லுக்குப் பிறகு வினைச் சொல் வந்தால் மிகாது.
ஒருங்குறி இணக்கதிற்காகவும், மேலுள்ள மாதிரிகளின் விதி விலக்கிற்காகவும் மேலும் சில எதிர்ப்பு மாதிரிகளும் கொண்டு அதன் அடிப்படையில் தீர்வைத் தருகிறது. எல்லாவற்றிற்கும் மேல் தமிழ் போன்ற மொழிகளில் ஒரு சிறு புள்ளியோ, சிறு ஒற்றோ பொருளையே மாற்றும் வல்லமை கொண்டது. எப்படி எழுதினாலும் ஏதோ ஒருவிதத்தில் பொருள்படும், எழுதியவர்தான் என்ன பொருளில் எழுதினார் என்பதை அவர்தான் தீர்மானிப்பதாக இருக்கும். அதனால் அடிக்கடி புழக்கத்தில் பயன்படும், அடிப்படை உருபுகள், ஒலிக்குறிப்புகள் முதலியவற்றைக் கொண்டு மென்பொருளால் ஓரளவிற்குத்தான் கணிக்கமுடியும். ஆனால் இந்தந்த இலக்கண விதிகள் என்று பயனருக்குத் துல்லியமாகவும் தரமுடியும். அவற்றை நோக்கியே நாவி அமைகிறது.
நிலுவையில் உள்ள பணி:
ஒரு சொல் இன்ன வகை எனத் தீர்மானிக்க அனைத்துச் சொல் பட்டியலையும் உருவாக்குவது கடினமான காரியம். ஏனெனில் ஒரு பெயர்ச்சொல் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட சொல்வடிவில் உலாவரும், வினைச் சொல்லிற்கு அதற்கும் மேல். ஆகவே இருபரிமாணச் சொல்பட்டியல் ஒன்று உருவாக்கப் பட்டுவருகிறது. இப்பட்டியல் நிறைவு பெறும் போது தமிழ்ச் சொற்களை எளிதில் அடையாளப்படுத்தப்பட்டுத் தீர்வு துல்லியமாகத் தரும் நாவி உருவாக்க வேண்டும்.